JANMASTAMI WELCOM SPEACH-2026
உ
சிவமயம்
வசுதேவ சுதந் தேவம் கம்ச சானுர மர்த்தனம்
தேவகி பர மானந்தம்கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்....!
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். வரவேற்புரை வழங்குவதற்கு உங்கள் முன் உங்கள் அன்பின் தமிழாசிரியன், அன்புச்செல்வன்.
கடவுள் என்பதற்கு அதாவது,கட + உள் உள்முகமாக தன்னை நோக்குதல் என்றும், மற்றொரு பொருள் கடப்பதற்கு அரிதான தடைகளைத் தாண்டி தன்முகமாகச் சிந்தித்தல் அல்லது அகமாகிய உள்ளத்தைக் கடந்து இறையின்பம் தேடல் என்றும் பலவிதமாகப் பொருள் கூறுவர் பெரியோர்.அதனை ஆமோதிக்கும் விதமாகத் திருவள்ளுவரும்,
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் ....என்று பாடுகிறார்.
இறைவன் நம்முடைய மனமாகிய இதயத்தாமரையில் என்றும் வீற்றிருக்கின்றார். அவரது திருவடிகளைப் பணிபவர் புவியினில் நீண்ட புகழோடு வாழ்வர் என்கிறார்.
பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனது பரிபூரண அன்பிற்கு ஏங்கி நிற்கின்றனர் . இதுவே, உயிர்களின் இயல்பான குணமாகும். அத்தகைய மனநிலையை நாமும் பெற்றிட வேண்டுமெனில், இறைவனது அவதாரங்களையும், அதன் நோக்கங்களையும், மீண்டும் மீண்டும் கண்டும் கேட்டும் உணர்ந்திட வேண்டும். அப்பொழுதுதான் நமது மனம் பண்படும். வாழ்வில் ஏற்றம் தரும் நல்ல பல மாற்றங்களும் நிகழும் என்பதே பெரியோர்கள் சொல்லியிருக்கும் இறையின்பம் காண்பதற்குரிய எளிய வழியாக உள்ளது.
அத்தகைய உயர்ந்த பண்புகளை வளப்படுத்திடவே இன்றைய ஆன்மீக சொற்பொழிவிற்கு நமது பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
"கற்றிலன் ஆயினும் கேட்க" .........என்பார் திருவள்ளுவர் .
நமது ஆன்மீக வேதங்களையும், இதிகாச புராணங்களையும் நாமே தேடித் தேடிக் கற்றுணர்தல் என்பது இன்றைய கலியுகத்தில் அரிதினும்அரிதான செயலாகும்.
நமது வாழ்க்கைப்
பயணம் எப்பொழுதும் இன்பமயமாகவே இருந்திட வேண்டும் என்று நாம் நினைத்தாலும், எதார்த்தமான வாழ்வினில்
இன்ப துன்பங்களை மாறிமாறி அனுபவித்தே ஆக வேண்டியுள்ளது. அதாவது, அறுசுவை
உண்ண வேண்டும் எனும் எண்ணம் நம்மிடம் இருந்தாலும், கசப்பு என்றவுடன் அனைவரும்
முகஞ்சுழிக்கவே செய்கிறோம். ஆனால், அக்கசப்பை உண்டால் மட்டுமே நோய் குறையும் என்று
மருத்துவர் அறிவுரை கூறுகிற போது நமக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் கசப்பை உண்கிறோம். பின்னர் நீங்கிக் கண்டு மகிழ்கிறோம்.
அதுபோலவே, இன்பதுன்பங்களில் உழலும்
நாம் இறையின்பத்தைப் பெற்றிடும் வழிகளையும் சிலநேரங்களில் நாம் மறந்தே விடுகிறோம். அதனை ஈடுகட்டி நிறைவு செய்வதே ஜென்மாஷ்டமி போன்ற ஆன்மீக விழாக்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
அனைவரும் பரப்பிரம்மத்தின் படைப்புகளே என்பதைப் புரிந்து கொண்டு நடப்பது தான் இறையன்பத்தை உணர்வதுதான் முதற்படியாகும்.
எல்லா நிகழ்வும் இறையருளால் தான் எதுவுமே இங்கு நிகழ்கிறது என்று உணர்ந்து தெளித்தல் பக்தியின் இரண்டாவது படிநிலை ஆகும்.
இறைச்சிந்தனையால் இறைவன்மீது நாம் செலுத்துகிற உண்மையான பக்தி நம்மைக் காக்கும். எத்துன்பம் நேர்ந்தாலும் இறைவன் நம்மைக் காப்பான் எனுந் திடமான நம்பிக்கை கொள்வதும், எல்லா உயிர்களிடத்தும் இறைத்தன்மையைக் காண்பதும் இறைவனின் அன்பைபெறத்தொடங்கி உள்ளதன் முழுமையான நிலையாகும்.
உலகின் நிலவமைப்புச்சூழலின்படி மாந்தரின் தோற்றம் நமது பாரத கண்டத்தின் தென்தமிழகத்தில் தான் தொடங்கி இருக்க வேண்டும் என்பது சங்க இலக்கியப் பாடல்களாலும், இன்றைய அறிவியல் ஆய்வுகளாலும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
அதற்கு
அடுத்த நிலையில் உலகிற்கே நாகரீகம் வழங்கிய நாடுகளின் வரிசையில் முதன்மையான இடம் பிடித்ததுள்ளதும் நமது
பாரத நாடே ஆகும்.
முன்னோர் மொழியினைக் கண்ணெனக் கருதி வாழும் முறைமை நமது வாழ்வியல் முறையாகும். கதைகள் கேட்டல் என்பது என்றும் எப்போதும் ஆனந்தம் தருவதாகும் . அது நமது கற்பனைக்கு விருந்தளித்துச் சிறப்பாகச் சிந்திக்கச் செய்யும் ஆற்றலையும் தரும் வல்லமை பெற்றது.
பக்தி நெறியினைப் போற்றி வளர்க்கும் நோக்கினில் நமது பள்ளி கண்ணனின் திரு அவதாரத் திருநாளை ஜென்மாஷ்டமி விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்தியத் திருநாட்டின் ஆன்மீக உணர்வினை மெருகேற்றிடும் வகையினில் முத்தமிழின் முதன்மையான தமிழான, இயற்றமிழாலும் தனது கணீர் எனும் குரலிசையால் இறை விருந்து படைத்திட வருகை தந்துள்ள 'சிதம்பரத்தை அடுத்த திருவகிந்திபுரம் ' ஸ்ரீ மதி. ஹரிப்பிரியா தேவநாதன் அவர்களைப் பள்ளியின் சார்பிலும், சுவைஞர்கள் சார்பிலும், தமிழ்த் துறையின் சார்பிலும், இவ்வினிய மாலைப் பொழுதில் பணிவான வணக்கத்துடன் வரவேற்று மகிழ்கின்றோம்.
வீடே குகுகுலமாகத் திகழ்ந்த ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றி ஒழுகும் நற்குடியில் தோன்றியவர். ஸ்ரீ வைஷ்ணவர்களான தந்தையார் மற்றும் மாமனாரின் அடியொற்றி நின்று குலக்கொடியாக வளர்ந்தெழுந்து இன்று நாடு போற்றும் நற்காரிகையாக வலம் வந்து, தான் பிறந்த அகத்திற்கும் , புக்ககத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருப்பவர் தான் இன்றைய சொற்பொழிவாளர் ஸ்ரீ வைஷ்ணவத் திலகம் ஸ்ரீ மதி ஹரிபிரியா தேவநாதன் அவர்கள்.
தனது சொல்லாலும், பரந்த வேதாந்த விளக்கங்களாலும், நாமும் பக்தி நெறியில் மேலோங்கிச் சிறந்து வாழ்ந்திட வழிகாட்டுதற்கு வருகை தந்துள்ள 'சொல்லமுதச் செல்வி ' என்னும் பெருமைக்குரிய ஸ்ரீமதி ஹரிப்ரியா தேவநாதன் அவர்களை ஜென்மாஷ்டமி விழாவிற்கு வருக வருக என இருகரம் கூப்பி அன்போடு வரவேற்று மகிழ்கின்றோம்.
"மன்னன்
எவ்வழி மக்கள் அவ்வழி" என்பதற்கு ஏற்ப கல்விப் பணியோடு
பாரதத்தின் கலை மற்றும் பண்பாட்டினைப் பாதுகாத்து வளர்க்கின்ற நோக்கில் செயல்படும், நமது பள்ளியின் தாளாளர் மற்றும் செயலர் திருமிகு. ஹித்தேஷ் கண்ணோடியா அவர்களையும்,
பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தேசிய நல்லாசிரியர். திருமிகு. நீலகண்ட பிள்ளை அவர்களையும்,
எல்லாம் வல்ல இறைவன் அருள்நிலை எங்கும் தங்கட்டும்
திவ்ய நாமம் திசையெங்கும் தேன்போன் றொலிக்கட்டும்
உலக மெலாம் உய்ந்திட மானிடர் பக்தியில் மூழ்கட்டும்
பெருமான் பேரருள் எம்மவர்க் கெந்நாளும் கிட்டட்டும்..!
எனக்கூறி இத்துடன்
என் சிற்றுரையை நிறைவு செய்து ,
எம்பெருமான் கண்ண பிரானின் பெருமைகளை அழகுற எடுத்து உரைத்திட வருகை தந்துள்ள ஆன்மீகச் சொற்பொழிவாளர் , உபன்யாசத்திலகம் ஸ்ரீ மதி ஹரிப்பிரியா தேவநாதன் அவர்களை மேடைக்கு அழைத்து அடியேன் விடை பெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
ஜெய் ஸ்ரீ ராம்..!
சுபம்
Comments
Post a Comment