பத்தாம் வகுப்பு.துணைப்பாடம். இயல் - 6 பாய்ச்சல்
இயல் - 6
பத்தாம் வகுப்பு.துணைப்பாடம்.
பாய்ச்சல் (சா. கந்தசாமி அவர்கள் எழுதியது.)
குறிப்புச்சட்டகம்
முன்னுரை
அனுமார் ஆட்டம்
சிறுவன் அழகு
தீப்பந்தம்
கலையார்வம்
முடிவுரை
முன்னுரை :
நிகழ்வுகலை என்பது மக்களை மகிழ்விக்கும் கலை ஆகும். ஒவ்வொரு கலைஞனும் தனக்கென ஒரு தனித்துவத்தை வைத்து இருப்பர். தன்னைப் போன்ற கலைஞனை உருவாக்கிட விரும்புவான். தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் சிறுகதை தொகுப்பில் இருந்து சா.கந்தசாமி அவர்கள் எழுதிய பாய்ச்சல் எனும் கதை பற்றி இங்கு காண்போம்.
அனுமார் ஆட்டம்:
நாகஸ்வரம் மேளமும் முழங்க அனுமார் ஆடினார். ஆவலுடன் சிறுவர்களும் பின்தொடர்ந்தனர்.ஊரின் நடுவே அமைந்திருந்த மண்டபத் தூணினைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான் அந்தச்சிறுவன். ஆட்டத்தைக் காண மிகவும் விரும்பினான். சிறிது நேரத்தில் குரங்கு போல வேடம் அணிந்த ஒருவரே அனுமார் ஆட்டம் அடிச் செல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். அனுமார் தாவியும் குதித்தும் ஆடினார். அவரது ஆட்டத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். அனுமார் ஆட்டம் அடியவர் தெருவோரக் கடைகளில் தொங்கிய வாழைத்தாரிலிருந்து சில பழங்களைப் பறித்துத் தந்து வேடிக்கை காட்டினார். சிறுவன் அழகு தன்னை மறந்து ஆட்டத்தை இரசித்தான்.
சிறுவன் அழகு :
பந்தலில் ஏறியும் மறைந்தும் குரங்கு வித்தை காட்டினார் அனுமார் வேடமிட்டவர். சிறுவன் தானும் அனுமாராக மாறுவதாக உணர்ந்தான். பிறகு அனுமாரின் வாலைச் சுமந்துகொண்டு அவருக்கு உதவியாக நின்று இருந்தான். அவனது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அனுமார் உன் பெயர் என்ன ? என்று கேட்டார். அழகு என்று பதில் அளித்தான் சிறுவன்.
தீப்பந்தம்:
வாலில் தீப்பந்தம் எரிந்தது. இசையின் நடுவே அனுமாரின் ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மரத்தில் ஏறினார்; சிறிது நேரம் கண்ணில் படாமல் மறைந்தார்; பின்னர், கீழே இறங்கி வந்து வாலில் தீப்பந்தம் கட்டி ஆடினார். நெருப்புக்கொழுந்து விட்டு எறிந்திட சுழன்று சுழன்று ஆடினார்; பயங்காட்டினார்; குரங்கினைப் போன்று குறும்புகள் செய்து காட்டினார். தீயை அணைத்துவிட்டு , துரித கதியில் இசை கேட்ப வேகமாக ஆடினார். ஆட்டம் முடிந்த பின் ஊரின் ஓரமாக இருந்த கோயிலின் அருகே இருந்த ஆலமரத்தின் அடியில் சோர்வுடன் சாய்ந்து அமர்ந்தார்.
கலையார்வம்:
கலையார்வம் அழகுவைப் பற்றிக் கொண்டது. அனுமாரின் வாலைக் கட்டிக்கொண்டு, இசைக்கு ஏற்ப ஆட முயன்றான் அழகு. கலைஞனின் முகம் மலர்ந்தது. சிறுவனுக்கு ஆட்டத்தின் நுட்பங்களை மெதுவாக ஆடிக்காட்டினார். அனுமாரைப் போலவே ஒப்பனை செய்து கொண்ட அழகு இசை கேற்ப அழகாக ஆடத்தொடங்கினான். சிறுவனின் மனதில் கலையார்வம் பாயத்தொடங்கியது. அழகு தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தான். அனுமார் வேடமிட்டு ஆடியவர் மனமகிழ்வோடு கண்ணயர்ந்தார்.
முடிவுரை:
சிறுவரின் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்தார் அனுமார். அவன் நல்ல கலைஞனாக வளர்வான் என்பதை உணர்ந்து கொண்டார். ஒரு கலைஞன் உருவாகிவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். அனுமார் ஆட்டக்கலை செழிப்பதைப் பார்த்து நிம்மதிப் பெரும் மூச்சு விட்டார் அந்தக் கலைஞர்.
வாழ்க என்றென்றும் வளத்துடனும் ..! நலத்துடனும்...!
Comments
Post a Comment