நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

குறிப்புச் சட்டகம் 
முன்னுரை 
நோய்வரக் காரணங்கள் 
வருமுன் காத்தல் 
உணவும் மருந்தும் 
உடற்பயிற்சிகள்  
முடிவுரை 

 முன்னுரை:

மகிழ்வான வாழ்விற்கான அடிப்படை உடல் நலத்துடன் இருப்பதே ஆகும்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" -
என்பது பழமொழி. உலகில் நீண்ட நாள் வாழ உடல் நலமாக  இருத்தல்  வேண்டும். அதனால் தான்,
 "உடம்பார் அழியும் உயிரார் அழிவர்"  என்றார் திருமூலர். 
 உடல் நலமே , நமது   உண்மையான செல்வம். எனவே, நோயின்றி  வாழ்வதற்கான  வழிகள்  குறித்து இக்கட்டுரையில்  காண்போம். 


நோய் வரக்காரணங்கள் :

இன்றைய நமது  வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது.   சுற்றுச்சூழலும்  மாசடைந்துள்ளது. சத்துக்குறைவான உணவுகள்,  உடற்பயிற்சி இன்மை, மனவழுத்தம் ஆகியவற்றால்  மக்கள் துன்பமடைகின்றனர். துரித உணவுக்  கலாச்சாரமே  நோய்கள்  வருவதற்குக்  காரணமாகின்றன.  உடலில் ஏற்படும் எல்லா நோய்ளுக்கும் காரணம் தவறான பழக்க வழக்கமே.  இதனை ஆய்வுகள்  மூலமாகக்    கண்டுபிடித்துள்ளனர்.

வருமுன் காத்தல்:

காலையிலும் , மாலையிலும் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

" உடல் நலமே , மனநலத்தின் ஆதாரம் "  
 என்பதை  உணர்ந்து  சத்தான உணவுகளை உண்ண  வேண்டும். நோய் வந்தபின்  மருத்துவமனை செல்வதைவிட, அதனை வராமல்  காப்பதே  சிறந்தது.   எளிமையாகக்  கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை  உண்ண  வேண்டும்.  இதனால்  உடல்நலம் காக்கப்படும். 

 " சுத்தம்  சோறு போடும் "  
"கந்தையானாலும்  கசக்கிக்கட்டு" -
 எனும்  பழமொழிகள் தூய்மையை  உணர்த்துகின்றன.   நாம்  அன்றாடம்  பயன்படுத்தும்  உணவு, உடை ,உறைவிடம்  ஆகியவற்றில் தூய்மையைக்  காக்க வேண்டும்.  இதனால்    நோயின்றி நீண்டநாள்  மனமகிழ்வுடன்    வாழலாம்
உணவும் மருந்தும் :

  நாள்தோறும் நாம் உண்ணும் உணவில்  , புரதம் , கொழுப்பு , மாவுச்சத்து  என அனைத்துச் சத்துக்களும்  உள்ள  சமச்சீர் உணவை    உண்ண  வேண்டும்.  உணவில் காய்கறிகளை  அதிகம்  சேர்த்துக் கொள்ளுதல்  நலம்.   உழைப்பின் தன்மைக்கு ஏற்ப  அளவோடு உண்ண  வேண்டும்.  இரவு உணவை மாலை ஏழு மணிக்குள் உண்ணுதல் நல்லது . இவ்வாறு செய்வதால் , நோய்கள் குறையும். நாம் மருந்துகள் சாப்பிடாமல்  நலமுடன் வாழலாம். 

உடற்பயிற்சிகள்:

" ஓடிவிளையாடு பாப்பா..   நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.." - 
என்று பாரதியார் பாடினார் .  எனவே , நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகமுக்கியம்.   தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்.  மூளை  புத்துணர்ச்சியுடன்  இயங்கும்.  நாம் என்றும் இளமையோடு   இருக்கலாம். 

முடிவுரை :

இறைவன் வழங்கிய அருட்கொடை நமது உடல்.  அதனைக்  காப்பது  நமது கடமை.  சுவரை வைத்துத்தான்  சித்திரம் வரைய முடியும். அதுபோல, உடலை வைத்துத்  தான் உயிரைப் பேண வேண்டும். விலைமதிக்க முடியாத  உடல் நலத்தைக்  காப்பது, நமது  கைகளில் தான் உள்ளது.

                   உடல் நலம் காப்போம். உள்ளம் மகிழ்ந்து  வாழ்வோம்.

தமிழாசிரியர் பழ. அன்புச்செல்வன்  APL2025       நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )