12.10.2023 - வாழ்த்துரை படம் அன்புச்செல்வன் சி

                        வாழ்த்துரை 

       படம் 

            அன்புச்செல்வன் சி

                    முத்தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டின் அழகிய ஊர்களில் ஒன்றான முறையூரில் 1971ஆம் ஆண்டு திருமிகு. மாணிக்கம் , திருமதி __________ தம்பதியரின்   திருக்குமரனார் தான்  சித்த மருத்துவர் மற்றும் மாற்றுத்திறன்  மாணவர்களுக்கான  சிறப்பு  ஆசிரியர்  திரு. சிதம்பரம் அவர்கள். தொடக்கக் கல்வியைத் தனது சொந்த ஊரான  முறையூரிலும் , மேனி லைப்பள்ளிப் படிப்பை  மாண்புமிகு. பாரதப்பிரதமர் ஜவஹர்லால் நேரு  அவர்களால்  திறந்து வைக்கப்பட்ட  தெக்கூர் ஸ்ரீ விசாலாக்ஷி  கலா
சாலையிலும் கற்றவர் . இளங்கலை மற்றும் முதுகலைப்  பட்டங்களை நமது பெருமைமிகு மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில்  பயின்றவர்.  திரு.சிதம்பரம் அவர்கள் மாற்றுத்திறன்  மாணவர்களுக்கான சிறப்புக் கல்வியியல் கல்வியைத்    தஞ்சாவூரிலும் கற்றுத்தேர்ந்தவர். ஆசிரியன் , ஆசான் என்போரைச் சமூகம் தெய்வங்களாகப் போற்றி மதிக்கிறது. அத்தகு பணியினைச் சிறப்பாகச் செய்துவருபவர்தான் பெருமைமிகு சதீஷ் என்று அன்போடு நம்மால் அழைக்கப்படும் சிதம்பரம் அவர்கள். மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கான ஆசிரியராக மட்டுமின்றி, சித்த மருத்துவத்திலும் சிறந்து விளங்குபவர். கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்குக் கற்பித்தல் என்பது சிக்கல் மிகுந்த ஒன்றாகும். அவ்வாசிரியர்கள், தாயினும் இனிய கனிவும், இறைவனினும் இரங்கும் கருணையும் உடையோராக இருந்தால் மட்டுமே,  அக்குழந்தைகளுக்குக் கல்விப்பணி ஆற்றிட இயலும். அவர்கள் இறைவனின் குழந்தைகள்   ஆவர். அதனை எண்ணி நாங்கள்  பெருமிதம் கொள்கிறோம். இயல்பான  திறன்கொண்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தலே சிக்கலான ஒன்றாக இருக்கும்  இக்காலச் சூழலில் மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்காகப் பணியாற்றுவதும்,  அவர்களுக்காகவே  இந்நநூலை எழுதியிருப்பதும், மிகுந்த பாராட்டிற்குரியதாகும்.



                     ஒவ்வொரு மொழிக்கும் எழுத்தின் வடிவமும் , அதன் ஒலிப்பு முறையும் இருகண் போன்றதாகும். குறிப்பாகத்  தமிழுக்கு மிகமிகத் தேவைகும். இவரது சிறந்த படைப்பான    தேன்தமிழ் கற்கும் தெய்வமொட்டுகள் " என்ற இந்நூல் பால்மனம் மாறாத தன்மையுடைய, மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கும் / சிறப்புக் குழந்தைகளுக்கும்  கிடைத்த ஓர் அரிய படைப்பாகும். இந்நூலானது சிறப்பு ஆசிரியர்கள் குலத்திற்கும் , சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்க்கும் கிடைத்த புதையல்  எனலாம்.  பேச்சுக்கலை பயிலும் குழந்தைகளுக்கு "தேன்தமிழ் கற்கும் தெய்வமொட்டுகள்" எனும் இப்புத்தகம் ஓர் அட்சய பாத்திரம் எனலாம். திருமால் மகாபலிச்சக்கரவர்த்தியிடம், வாமனாக வந்து மூன்றடி மண் கேட்டு இரண்டு அடியால் உலகத்தை அளந்தார். அதனால்,  மகாபலியின் ஆணவம் எனும் இருளகன்றது. அவனுக்கு மேன்மை தந்தார் பெருமாள் அன்று. ஆனால் இன்று , நமது சிதம்பரம் எண்ணக் கருத்தினால், சிறப்புக் குழந்தைகளின் நாவினில் நந்தமிழை முத்தமிழை நிற்கச் செய்யும் வழி வகையைக் கண்டுள்ளார். செந்தமிழாம் நற்றமிழ் மாநிலத்தில் ஒளிர்ந்திட  இந்நூலைச் செய்திருக்கின்றார். அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்   வகையில் கருத்துணர்த்தும்  படங்கள் ,  சொல்வடிவங்கள் ,  அதற்கான சொற்றொடர்கள் , உச்சரிக்கும் முறைக்கான நாவின் முயற்சி நிலைகள் என அனைத்தையும்  இலக்கணநெறி நின்று தந்திருப்பது இவரது நூலின் தனிச்சிறப்பாகும்.


                பொருளிலாருக்கு இவ்வுலகம் இல்லை என்பதை உள்வாங்கிக் கொண்டு, அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதையும் உணர்ந்து, மாணிக்கம் தந்த மாசற்ற தமிழனாம் நமது  சிதம்பரம் அவர்கள்  " தேன்தமிழ் கற்கும் தெய்வமொட்டுகள் புத்தகத்தைப் படிப்பதற்கு மட்டுமல்லாது , உலகம் உள்ளமட்டும் பயன்படக்கூடிய  வைரமாகத் தந்துள்ளார். இனிய எளிய நடையில் இன்தமிழை அள்ளிப் பருகுகின்ற அமிழ்தென, தனது அனுபவத்தைக் கொண்டும், நன்னூலாரின் சொல், அதன் பிறப்பியல்  இலக்கண அமைப்போடும் ,  எடுத்துக் காட்டுகளோடும் அழகுற, " தேன்தமிழ் கற்கும் தெய்வமொட்டுகள் " எனும் நூலகத்  தந்திருக்கிறார். உடல்நலம் காக்கும் சித்தமருத்துவருமான திருவாளர் சிதம்பரம் அவர்கள் தமிழிலக்கிய உலகிற்கு இன்னும் எண்ணற்ற நூல்களைப் படைத்திட வேண்டுமென  உளமார  வாழ்த்துகிறேன். தமிழினம் உள்ளவரை இவரது புத்தகங்கள் அனைவருக்கும்  பயன்பட வேண்டும். எல்லோருக்கும்  கல்விக்கண் தந்தருளும்  கணேசர் பெருமான் ஆசிரியர்  சிதம்பரம்  அவர்களுக்கும்  நல்லருள்புரிந்திட வேண்டுமெனப்  போற்றி  வணங்குகிறேன். 

என்றும் அன்புடன்,

அன்புச்செல்வன் சி
தலைமையாசிரியர்
சதுர்வேதி  மங்கலம் 
சிவகங்கை - மாவட்டம்

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )