பத்தாம் வகுப்பு இயல் 5 - செய்யுள் / உரைநடை - வினா விடைகள்

 பத்தாம் வகுப்பு  இயல் - 5  செய்யுள்  / உரைநடை  வினா விடைகள்   


நீதி வெண்பா :

கல்வியின் சிறப்பு:

உலகம் கற்றவர் வழியில் செல்கிறது என்றுகூறுகிறது சங்க இலக்கியம்.தோண்டும் அளவிற்கு நீர் சுரப்பது போலக்  கற்கும் அளவிற்கு அறிவானது ஊறும் என்கிறது திருக்குறள். பூக்களை நாடிச்செல்லும் வண்டுகள்போல நல்ல நூல்களை நாம் நாளும்  நாடிக்கற்க வேண்டும்என்கிறது  அறவிலக்கியங்கள். 


அன்பினை வளர்த்து , அறிவினைப்பெருக்கி , செயலினைச் சீராக்கி,  மனமயக்கத்தை அகற்றுவது கல்வி. அறிவினுக்குத் தெளிவைத் தந்து, உயிருக்கு அரிய துணையாய்  இருந்து இன்பந் தருவது கல்வியே ஆகும். எனவே, அத்தகு கல்வியைப்  போற்றிக்காக்க வேண்டும்.


சதம் என்பதற்கு நூறு என்பது பொருள். ஒரே நேரத்தில் புலமை, கவனம் ,  நினைவாற்றல், நுண்ணறிவு விழிப்பு நிலையில் இருந்து கொண்டு, தன்னைச்  சுற்றி  நிகழும் நூறு  செயல்களையும் நினைவில் நிறுத்தி , விடையளித்தலே  சதாவதானம் என்று அழைக்கப்படும். 


அத்தகு திறன் பெற்றவர்தான் செய்குத்தம்பிப்  பாவலர் அவர்கள் . அதனை,   சென்னை விக்டோரியா அரங்கில் செய்தும் காட்டினார். சதாவதானி என்று பாராட்டப்பட்ட அவர் , பிறந்த ஊரான இடலக்குடியில் மணி மண்டபமும் , பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது. இவர் சீறாப்புராணத்திற்கும் உரை  எழுதியுள்ளார். இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன என்பது தனிச்சிறப்பாகும். 


வினாக்கள் 

1. கல்வியின் சிறப்பு யாது.?

2. கல்வியை ஏன் போற்றிக்காக்க வேண்டும்?

3. சதாவதானம் - என்றால் என்ன?

4. செய்குத்தம்பிப்  பாவலர்- பற்றிக்குறிப்பு எழுதுக?




திருவிளையாடற் புராணம்.

பரஞ்சோதி முனிவர்.


இடைக்காடனார் கவி பாடல் / குசேல பாண்டியன் செவி சாய்க்காமை:

குசேலபாண்டியன்  மிகுந்த  கல்வியறிவு உடையவன்  என்று பலரும் கூறக்கேட்டார்  இடைக்காடனார். கபிலரின் நெருங்கிய நண்பரான இவர் , வேப்ப மாலை அணிந்த மன்னனின் அவைக்குச்சென்று கவி பாடினார். பொருட்செல்வத்தோடு கல்விச்செல்வமும் மிக்குடைய பாண்டியன்  மன்னன், இடைக்காடனாரின் பொருட்சுவை நிறைந்த கவிதையைச்  சுவைக்காமல் , தலை அசைக்காமல்  புலவரின் புலமையை அவமதித்தான்.


இடைக்காடனார் இறைவனிடம் சென்று முறையிடல்.

இறைவன் உறையும் இடம் சென்ற இடைக்காடனார், " பாண்டியன்,  என்னை இகழவில்லை , சொல்லின் வடிவமாக விளங்கும் பார்வதி தேவியையும் , சொல்லினது  பொருளாக விளங்கும் உன்னையும்  அவமதித்தான் " என்று சினத்துடன்  கூறினார். 


இறைவன் கோவிலை நீங்குதல். 

இறைவன்  இடைக்காடனாருக்கும் , கபிலருக்கும் இன்பம்தர  எண்ணிய இறைவன்,  ஞான வடிவாகிய லிங்க வடிவத்தை மறைத்து , உமாதேவியாரோடு  வையை  ஆற்றின் தென்புறத்தில்  திருக்கோவில் கொண்டு அமர்ந்தார். 


பாண்டியன் காரணம் கேட்டல்/ இறைவன் பதிலுரைத்தல். 

குசேல பாண்டியன் இறைவனைப் பணிந்து , காரணம் யாதென வினவினான். 

என்னால் , என்படைகளால் , கள்வரால், என்பகைவரால், காட்டில் வாழும் விலங்குகளால், இடையூறு ஏற்பட்டதோ ? . இந்நாட்டின் மக்கள் ஒழுக்கம் குன்றினாரோ? தவமும் தருமமும்  சுருங்கியதோ..? இல்லறமும் , துறவறமும்    தவறியதோ ? எமது தந்தையாகிய இறைவனே யான் எதனையும் அறியேன். அருள் கூர்ந்து காரணம் யாதென கூறுங்கள் என வேண்டினான் குசேல பாண்டியன். 

" கடம்ப வானத்தை நாம் ஒருபோதும் நீங்க மாட்டோம். இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்த  குற்றத்திற்காகவே இங்கு வந்தோம். உன்னிடம் யாம் கண்டதவறு வேறு ஒன்றுமில்லை " என்று கூறினார் இறைவன். இடைக்காடனார் மீது கொண்ட அன்பே காரணம் என்றார். 


இடைக்காடனாருக்குக்  குசேல பாண்டியன் பெருமை செய்தல்.

அசரீரியாக வானிலிருந்து  இறைவனது ஒலித்த சொற்கேட்ட குசேல பாண்டியன் தனது பிழை உணர்ந்து வருந்தினான். உமையொரு பாகம் கொண்ட இறைவனே , புண்ணியனே , சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியோர் பண்பல்லவா? பொறுத்தருள வேண்டு - -மெனப்பணிந்தான். 

மன்னனது மாளிகையானது  வாழை , கமுகு, சாமரை , பலவகை  மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. அன்றலர்ந்த மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் பலரும் சூழ்ந்திருக்க, அறிவையே அணிகலனாகக்  கொண்ட இடைக்காடனாரை  மங்களமாக அழகு செய்து  பொன்னிருக்கையில் அமர வைத்தான் பாண்டிய மன்னன். 

  அவையில் இருந்த பாண்டிய மன்னன் ,  " புண்ணிய வடிவான புலவர்களே , நான் அறியாது இடைக்காடனாருக்குச் செய்த  குற்றத்தைப்  பொறுத்தருள்க ! என வேண்டினான். அவையில் இருந்தோர் , பாண்டியனின் அமுதம் போன்ற  குளிர்ந்த சொற்கேட்டு  தங்களின் சினந் -தணிந்து மகிழ்ந்தனர். 

இவ்வாறு , தமிழ்ப்புலவருக்கு  இறைவன் அருள் செய்த தன்மையானது  இப்பாடப்பகுதியில்  அழகாக விளக்கப்பட்டுள்ளது.


வினாக்கள் 

1. குசேல பாண்டியன் செய்த பிழை யாது ?

2.  இடைக்காடனார்  இறைவனிடம் முறையிட்டது யாது ?

3. கபிலரின் நண்பரான இடைக்காடனரை மகிழ்விக்க இறைவன் செய்த          திருவிளையாடல்  என்ன ?

4.  தனது தவறை உணர்ந்த குசேல பாண்டியன் செய்தது என்ன.?




பாடம் 5  உரைநடை -- மொழிபெயர்ப்புக்கல்வி 


மொழிபெயர்ப்பின் தேவை ;

  • ஒரு மொழியில்  உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவதே  மொழிபெயர்ப்பு ஆகும் என்கிறார் அறிவியல் தமிழ்ச்  சொல்லகராதியை உருவாக்கிய தமிழறிஞர்  மணவை முஸ்தபா அவர்கள்.
  • உலக நாகரீக  வளர்ச்சிக்கும் , பொருளியல் மேம்பாட்டிற்கும்  மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்கிறார் மு.கு.ஜெகந்நாத ராஜா அவர்கள். 

  • தொல்காப்பியர்  தனது  98 வது  மரபியல் நூற்பாவில் , மொழிபெயர்த்தல் எனும் தொடரைப் பயன்படுத்தியுள்ளார். 

  • சின்னமனுர் செப்பேடுகளில் " மகாபாரதம்  தமிழ்ப்படுத்தும் மாதுராபுரித்  தமிழ்ச்சங்கம் " - எனும் தொடர் மூலமாக  சங்க காலத்தில் தமிழில் மொழிபெயர்ப்பு  மேற்கொள்ளப்பட்டதை  அறிய முடிகிறது. 

  • வடமொழி  கதைகளைத் தழுவி  தமிழில்  காப்பியங்களும் , புராணங்களும்  படைக்கப்பட்டன. அந்த வகையில் படைக்கப்பட்டவையே  பெருங்கதை , சீவக சிந்தாமணி , கம்பராமாயணம் , வில்லிபாரதமும் ஆகும். 

  • மனிதக் கூட்டங்களை இணைத்துச்  சிறப்பாகச் செயல்பட  வைப்பது  "மொழி " எனும்  வலிமை மிக்க  "பாலமே " ஆகும் என்கின்றனர், மொழியியல் அறிஞர்கள் .

  • இந்திய விடுதலைக்குப்பின்  நாட்டின் ஒற்றுமைக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  அரசு அதற்கு மொழியை ஒரு கருவியாகக் கொண்டது. நாட்டின் பல்வேறு மொழி சார்ந்த எழுத்தாளர்களை ஒன்றிணைத்தது.  அவர்களது படைப்புகளை மொழிபெயர்த்து , பிற மொழிகளில்  வெளியிட்டு ஒன்றுபடுத்தியது. இப்பணிகளைத்   தேசியப் புத்தக நிறுவனம் , சாகித்திய  அகாடமி , தென்னிந்தியப்  புத்தக நிறுவனம்  ஆகியன செய்தன. 


மொழிபெயர்ப்புக்கல்வியின்  நன்மைகள்:

  • மொழிபெயர்ப்புக்  கல்வியால்  அனைத்துலக அறிவைப்பெற முடியும். 
  • எல்லா அறிவு சார் / தொழில்சார்  பணிகளுக்காக  வெளிநாட்டினரை எதிர்பார்க்க வேண்டியதில்லை. 
  • மனித வளத்தை முழுமையாகப் யன்படுத்த முடியும். 
  • " யாதும் ஊரே  யாவரும் கேளீர் " - எனும் ஒருலகத் தன்மையைப் பெற முடியும்.  
  • இந்திய விடுதலைக்குப்பின்  வெளிநாட்டுத் தூதரகங்கள் நிறுவப்பட்டன. அவற்றின்  மூலமாக  அவர்களின் காலை, பண்பாடு , வளர்ச்சியோடு , மொழியைக்  கற்றுத்தரும் முயற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியைத் தனியார் நிறுவனங்களும்  செய்து வருகின்றன.
  • பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களின்  மூலமாகவும் பிறமொழிக்  கல்வி கற்கும் வாய்ப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன. 
  •  உலகப்போரின்போது , ஜப்பானின்  " மொகு சாஸ்ட்டு " எனும் தொடருக்கு ,  ' விடை தர அவகாசம் வேண்டும் '  எனும் தொடரை - மறுக்கிறோம் என்று பொருள் கொண்டதாலேயே  ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்டது எனும் வரலாற்று நிகழ்வு  மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை  உணர்த்துவதாக உள்ளது. 

இலக்கிய இறக்குமதி; 

  • ஒரு நாட்டின் மின்னாற்றல் பயன்பாட்டைப் பொறுத்து  அந்நாட்டின்  தொழில்வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல , ஒரு நாட்டின் மொழிபெயர்ப்புச்  செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கியைக்கொண்டு , அந்நாட்டின் பண்பாட்டையும் , அறிவையும் மதிப்பிடுவார்கள்.  
  • மொழிபெயர்ப்பு இல்லாவிடில்  சில படைப்பாளிகளும் கூட உருவாகி இருக்க முடியாது.  கம்பரும்,  ஷேக்ஸ்ப்பியரும்  கொண்டாடப்படுவதன்  காரணம் அவர்களது படைப்புகள்  மொழிபெயர்க்கப்பட்டதே ஆகும். இரவிந்த்ராநாத் தாகூர்  எழுதிய கவிதைத் தொகுப்பை , ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தபின்னரே " நோபல் பரிசு " பெற்றது. 
  • 18ம்  நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில்  ஆக்கப்பட்டன. ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் , ஆங்கில ஐரோப்பிய அறிமுகமாயின. தமிழ்நூல்களும் பிற மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன.  திருக்குறள் உலக மொழிகளுக்கு  உரிய நூலக மாறியது மொழிபெயர்ப்பினால்தான். 
  • பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ள மொழிபெயர்ப்பு உதவுகிறது. புதிய படைப்புகள் உருவாகவும்  உதவுகிறது. பொதுநிலை உடைய படைப்புகளை மொழி எனும் வேலி தடுக்கிறது.  அதனை அகற்றும் பணியை மொழிபெயர்ப்புச்  செய்கின்றது. 
  • மொழிபெயர்ப்பின் பயனால் , பிரெஞ்சு , ஜெர்மன் , அமெரிக்க , ஆப்பிரிக்கா , இலத்தின், - மொழிகளின் படைப்புகள் அனைத்தும்  எல்லோராலும் வாசிக்கப்படுகின்றன.  இவை பன்முக  வளர்ச்சிக்கும்  துணையாக  உள்ளன.    

மொழிபெயர்ப்பின் செம்மை ;

  • மொழிபெயர்ப்பு என்பது சிறந்த கலை ஆகும். மொழிபெயர்ப்பாளன்  இருமொழியிறு மொழிகளிலும்  சிறந்த அறிவினைப் பெற்றிருப்பதோடு,  அம்மொழிகள்  சார்ந்த  நாட்டுமக்களின்  காலை இலக்கிய , நாகரீக பண்பாடு பற்றிய அறிவினையும்  பெற்றிருக்க வேண்டும். 
  • மொழிபெயர்ப்பு  என்பது மொழியின் மூலக்கருத்துக்களை  வெளிப்படுத்துவதாகவும் , மொழிச் சிதறலின்றியும்  அமைய வேண்டும். 
  • மொழிபெயர்ப்பு என்பது கவனமாகவும் , முறையாகவும்  செய்யப்பட வேண்டும். 
  • Hundred  railsleepers were wsahed away - என்பதை  ஒரு செய்தித்தாள் - தொடர் வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த நூறுபேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டது. Railsleepers -  என்பதற்குத் தண்டவாளத்தின்  குறுக்குச் சட்டங்களைக்  குறிப்பதாகும்.  அதனை உறங்கிக்கொண்டிருந்தோர்  என்று மொழி பெயர்த்தது  பெறும்பிழி ஆயிற்று. 
  • Camel -என்பதற்கு  வடம் ( கயிறு ) , ஒட்டகம்  என இரு வேறுபொருள்கள் உண்டு.  எனவே அதனை பொருள் அறிந்து மொழிபெயர்க்க வேண்டும். 


மொழிபெயர்ப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மைகள்; 

  • Underground  drainage - என்பதை  மொழிபெயர்த்து பாதாளச்சாக்கடை என்றனர். ஆனால், அது பொருத்தமாக இல்லை. தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் புதைச்  சாக்கடை  என்றனர். அது பொருத்தமாக அமைந்துவிட  அதனையே பயன்படுத்தத்தொடங்கினர். 

  • Tele - என்பது தொலை  ( தொலைவு ) என்பதைக் குறிக்கிறது. ஆகவே , இதனை முன்னோட்டமாகக்கொண்ட சொற்கள் எளிதாக மொழிபெயர்க்கப்பட்டன. 
1. Telephone =  தொலைபேசி 

2.Television = தொலைக்காட்சி 

3. Telescpoe =  தொலைநோக்கி 

4. Telemetry = தொலை அளவியல்  என்று மொழிபெயர்க்கப்பட்டன. 


  • Trans - எனும் சொல்லானது முன்னோட்டமாக வந்தாலும் வெவ்வேறு  பொருளைத் தருகிறது. 

1. Transcribe  =  படியெடுத்தல் 

2.Transfer     =  மாறுதல் 

3. Transform  =   உருமாற்றுதல் 

4. Transact  =  செயல்படுத்துதல்  -  என முன்னொட்டாகிய  Trans -  என்பதைக்கொண்டு  மொழி பெயர்க்காமல்  பயன்படும் நிலையறிந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

  • எனவே , மொழிபெயர்ப்பு சிறப்பது  மொழிபெயர்ப்பாளனால் மட்டுமல்ல, அவனது  கலைச்சொல்லாக்கும்  திறானால் தான்  என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. 

வினாக்கள் 

1. மொழிபெயர்ப்பின் தேவை  குறித்து  எழுதுக.

2. இலக்கிய இறக்குமதி என்றால் என்ன.?

3.மொழிபெயர்ப்பின் செம்மை என்பது பற்றி எழுதுக .

4. மொழிபெயர்ப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மைகள் பற்றி  எழுதுக.



வினா - விடை  /  பொருள்கோள் 
நிரப்புக.

1. மொழியின் வளர்ச்சி என்பது  வினா வினவுவதிலும் , விடை தருவதிலுமே   உள்ளது. 

2. வினா ஆறு வகைப்படும். 

3. தெளிவுபெற வேண்டிக்கேட்பது / தொடுப்பது வினா எனப்படும். 

4. விடை எட்டு வகைப்படும். 

5. வினாவிற்குப் பதில் தருவதே விடை எனப்படும். 

6. செய்யுளில் அமைந்துள்ள சொற்களைப்  பொருளிற்கு ஏற்றவாறு,  சொற்களையோ  அல்லது தொடர்களையோ,   சேர்த்தோ அல்லது மாற்றியோ அமைத்துப் பொருள்கொள்ளும்முறைக்குப்  ' பொருள்கோள் '  என்பது பெயராகும். 


7. பொருள்கோள் எட்டு வகைப்படும். 

8. நிரல்நிறைப்பொருள்கோள்  இரண்டு வகைப்படும். 

9. முறை நிரல்நிறைப்பொருள்கொள்  ,  எதிர் நிரல் நிறைபொருள்கோள்  என நிரல்நிறைப்பொருள்கோள்  இரண்டு வகைப்படும். 

10. ஆற்றுநீரின் போக்கைபோல செய்யுளின் தொடக்கம் முதல் முடிவுவரை  நேராகப் பொருள்கொள்ளுமாறு அமைந்தால் அது  ஆற்றுநீர் பொருள்கோள் எனப்படும். 


11. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப்  பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு  ஓன்று  கூட்டிபி பொருள்கொள்ளுவதற்கு  கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்பது பொருளாகும். 

12.  தான் அறிந்த விடையை , பிறரும் அறிந்துள்ளனரா ? என்பதை அறியும் பொருட்டு வினவுவது  அறிவினா  எனப்படும். ( ஆசிரியர் மாணவரிடம் கேட்பதுபோல் )

13. தான் அறிந்திராத ஒன்றை அறிந்து  கொள்வதற்காக வினவுவது அறியா வினா ( மாணவன் ஆசிரியரிடம்  வினவுவது போன்றது)

14. ஐயம் நீங்கித்  தெளிவு  பெறுவதற்காக ஐயா வினா  எனப்படும்.

15.  ஒருபொருளைப்   பெறும்பொருட்டு / வாங்கிக்   கொள்ளும்பொருட்டு  வினவுவது  கொளல்வினா  எனப்படும்.

16. ஒருபொருளைப்  பிறருக்குக்  கொடுத்து  உதவும் பொருட்டு  / வழங்க வேண்டி வினாவது கொடைவினா  எனப்படும். ( கொடை வழங்கல் )

17. ஒரு  செயலைச்  செய்யுமாறு ஏவுதற் பொருட்டு  வினவுவது  ஏவல் வினா எனப்படும்.  ( ஏவல் - கட்டளையிடுதல் )

----------------------------------------------------------------------------------------------------------------------------

18. ஒன்றினைச்  சுட்டிக்காட்டிக்  கூறும் விடை ,  சுட்டுவிடை  ஆகும்.

19. எதிர்த்து அல்லது மறுத்துக்கூறும் விடை  ( எதிர்மறையாக)  மறைவிடை எனப்படும்.

20. நேர்மறையாக / உடன்பட்டுக்கூறும் விடை  நேர்விடை எனப்படும். 

21. வினாவிற்குரிய விடை,   கட்டளையாக  அமையும் எனில்  ஏவல்விடை எனப்படும். 

22. கேட்கப்பட்ட  வினாவிற்குப்பதிலாக /  இன்னொரு வினாவையே  பதிலா கக் கேட்பது  வினா எதிர் வினாதல்  விடை எனப்படும். 

23. வினாவிற்கு  விடையாக / அதனைச் செய்ததால் ஏற்பட்ட துன்பத்தையோ,  அல்லது ஏற்கனவே நேர்ந்ததையோ  விடையாக வழங்குதல்  உற்றது உரைத்தல்  விடையாகும்.  

24. வினாவிற்கு விடையாக அப்படிச் செய்தால் தனக்கு என்ன நேரும் என்பதை / இனிமேல் நேர்வதைக்  கூறுதல்,   உறுவது கூறல்  விடையாகும். 


25. கேட்கப்பட்ட வினாவிற்கு விடையாக / அதனோடு நெருங்கிய தொடர்புடைய  ஒன்றை / அதாவது இனமான ஒன்றை விடையாகக் கூறல்  இனமொழி விடை  எனப்படும்.
 


பழ. அன்புச்செல்வன் 

தமிழாசிரியன் 

தமிழன் என்று சொல்லடா....!!                     தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!                                   வாழ்க  வையகம் ..!!


ponanbu2022










Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )