பத்தாம் வகுப்பு இயல் - 2 கேட்கிறதா என் குரல்..! /காற்றே வா…! / முல்லைப்பாட்டு / புயலிலே ஒரு தோணி
இயல் 2
உரைநடை பாடம்
கேட்கிறதா என் குரல்..!
காற்றின் சிறப்பு
கண்களால் காண முடியாது , மெய்யால் மட்டுமே உணரக் கூடியது. அது இன்றேல் புவியியல் உயிர்களின் வாழ்வு என்பதே கிடையாது அத்தகு ஆற்றல் மிக்கது காற்று.
தொல்காப்பியரின் கூற்றுப்படி பஞ்ச பூதங்களில் ஒன்றாக உள்ளது காற்று.
திருமூலர் தனது திருமந்திரத்தில் மூச்சுப் பயிற்சி , உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறுகிறார்.
அவ்வையார் தனது திருக்குறளில்,
வாயு வழக்கம் அறிந்து அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்.
( குறள் எண் 42. )
இக்குறட்பா , காற்றுக்கும் ஆயுள் பெருக்கத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் கூறுகிறது.
காற்றிற்கு வழங்கும் பெயர்கள்
காற்றிற்கு அதன் தன்மையைப் பொறுத்து பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
காற்றினை , வளி , தென்றல் , புயல் , சூறாவளி எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். பருவநிலை , சூழல் , வீசும் வேகம் என்பதற்கேற்ப பூங்காற்று , கடல் காற்று , காற்று , சூறாவளிக் காற்று எனப் பல பெயர்களில் வழங்கப்படுகின்றன.
கிழக்கு என்பதற்கு குணக்கு என்னும் பெயரும் உண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது குளிர்ச்சியையும் மழையையும் தருவதால் கொண்டல் என்றும் மழைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறது.
மேற்கிலிருந்து வீசுவது குடக்கு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இது வறண்ட வலிமைமிக்க காற்றாகும்.
வடக்கு என்பதற்கு வாடை என்ற பெயரும் உண்டு இது பனிப்பகுதியில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றைக் கொண்டதாக இருக்கும்.
தெற்கிலிருந்து வீசும் காற்றுக்குத் தென்றல் என்ற பெயருண்டு. தென்றலானது , கடல் , மலை , செடி, கொடி , ஆறுகள் என அவற்றைத் தழுவி தாண்டி இயல்பாக வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.
இலக்கியங்களில் காற்று
சிலப்பதிகாரம்:
“ வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்………..…. ! “ ( சிலம்பு: 2:24 )
தென்றலானது மலர்களின் நறுமணத்தையும் வண்டினங்களையும் அழைத்து வருவதாகச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது
“ நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொறுப்பில்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே…! “ என்று
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது நூலில் பெண்ணொருத்தி தூது சென்றுவர தென்றலை அன்போடு அழைப்பதாகப் பாடியுள்ளார்.
திரை இசைப் பாடல்கள்
“ நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே… ! “
எனக்
கவியரசு கண்ணதாசன் அவர்களும் தென்றலின் சிறப்பை மிக அழகாகப் பாடியுள்ளார்.
முந்நீர் நாவாய் ( கடற்கப்பல் பயணங்கள் )
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ..
புறநானூறு 66 ஆம் பாடல் கரிகாலன் கடல் வணிகத்தில் சிறப்புற்று விளங்கினான். அவரது நாட்டின் கப்பல் போக்குவரத்து வணிகத்திற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது காற்றின் வலிமையே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிப்பாலஸ் எனும் கிரேக்க மாலுமி பருவக் காற்றின் உதவியால் நடுக்கடல் வழியாக முசிறி துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் வழியைக் கண்டுபிடித்தார் அவரால் கண்டுபிடிக்க பருவக்காற்றுக் காலப் பயணமானது ஹிப்பாலஸ் பயணம் என்று அழைக்கப்படுகிறது. அவர் கண்டறிந்த பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று என்கிறது வரலாறு.
பருவமழை தரும் காற்று:
பச்சமேகங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதும் , மழையைப் பெறச் செய்வதும் காற்றே ஆகும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றும் வீசுகின்றன.
இந்தியநாடு வேளாண்மையை முக்கியமான தொழிலாகக் கொண்ட நாடாகும்.
நாட்டிற்குத் தேவையான 70 % சதவிகிதம் மழையைத் தருவது தென்மேற்குப் பருவக்காற்றே ஆகும்.
வடகிழக்குப் பருவக் காலங்களில் தாழ்வு மண்டலமாய்த் தவழ்ந்து வருகிறது ; புயலாய் மாறுகிறது அதன் மூலம் மழையையும் புயலினையும் பெறுகிறோம்.
புறநானூற்றுப் பாடல் பாடிய ஐயூர் முடவனார் “ “ “ வளி இன்றேல் வலி இல்லை “என்று காற்றின் வலிமையைத் தடுக்கக் கூடிய வலிமை வேறு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்
ஆற்றல் கொண்ட காற்று
உயிர்களக் காத்தல் , உற்பத்தியைப் பெருக்குதல் , விதைகளை எடுத்ததுச் சென்று தூவுதல் , மகரந்தத் தூளைச் சுமந்து சென்று உணவு உற்பத்திக்கு உதவுதல் போன்ற பல பணிகளைச் செய்து கொண்டே இருக்கின்றது காற்று. நவீன தொலைத்தொடர்பு மையமாகவும் திகழ்கிறது. மின்சார உற்பத்திக்குக் காற்றாலைகள் உதவுகின்றன. இதனால் கனிம வளமான நிலக்கரி பாதுகாக்கப்படுகிறது. அதன் மூலமாக காற்று மாசடைவது குறைக்கப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்திலும் தமிழ்நாடு முதல் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காற்று மாசுபட க் காரணங்கள்:
· காற்று இல்லையேல் நாம் உயிர் வாழ இயலாது. நமது அறியாமையால் ஒவ்வொரு நொடியும் காற்று மாசு அடைந்து கொண்டே இருக்கின்றது.
· சாலைகள் வெளியிடும் புகை; அதிகப்படியான தனிநபர் ஊர்தி பயன்பாடுகள்; மெது உருளைகள் மற்றும் நெகிழிப் பைகளை எரித்தல்.
· பல்வேறு வகையான குளிரூட்டிகள் , குளிர் சாதனப் பெட்டிகள் பயன்படுத்துவதாலும் உருவாகும் குளோரோ புளோரோ கார்ப்பன் காற்றை மாசடையச்செய்கிறது. இதனால் பூமியின் போர்வையாய் அமைந்துள்ள ஓசோன் படலமத்தில் துளையேற்பட்டு , புவியின் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது.
காற்று மாசினால் ஏற்படும் நோய்கள் :
· காற்று மாசினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவது குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ( UNICEF) கூறுகிறது
· புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றன. நமது உடல் உறுப்புகளில் கண்களும் , தோலும் பாதிக்கப் படுகின்றன.
· காற்று மாசினால் தலைவலி , தொண்டைக்கட்டு , காய்ச்சல் , நுரையீரல் புற்று நோய் , இளைப்பு நோய் எனப்பல நோய்களும் ஏற்படுகின்றன. அமில மழையும் அடிக்கடி பெய்கிறது.
காற்று மாசு குறைவதற்கு நாம் செய்ய வேண்டியன.
· ஆண்டு தோறும் ஜூன் மாதம் 15ஆம் நாளை உலக சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடி வருகின்றோம். நாம் வெளியிடும் மூச்சுக்காற்றை கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு உயிர்க்காற்றைத் தருவது மரங்கள். மரங்களே மழையைப் பெய்யச் செய்கின்றன. அத்தகு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். காடுகளை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும்.
· பொதுப் போக்குவரத்தை மக்கள் மிகுதியாக பயன்படுத்த வேண்டும்.
· நெகிழி , மெதுஉருளை போன்றவற்றை எரிக்கக் கூடாது.
· தொழிற்சாலைகள் வெளியிடும் காற்றை , மறுசுழற்சி செய்து வெளியிடுதல் வேண்டும்.
இவ்வாறு செய்தால் , காற்று காக்கப்படும். மக்கள் நோய் இன்றி வாழ்வர்.
வினாக்கள்
1. காற்றிற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களும் அதற்கான காரணங்களும் பற்றி எழுதுக…?
2. இலக்கியங்களில் காற்று எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.?
3. காற்றின் சிறந்த ஆற்றல்கள் பற்றி எழுது..?
4. காற்று மாசு ஏற்படக் காரணங்கள் யாவை..?
5. காற்று மாசினால் ஏற்படும் நோய்கள் அதனைத் தடுக்கும் வழிகள் குறித்து எழுது..?
முல்லைப்பாட்டு
இயல் - 2
நிலம்:
முல்லை நிலம் - காடும் காடு சார்ந்த பகுதியும் . இது குறிஞ்சி நிலத்தை அடுத்து அமைந்த நிலமாகும். காட்டாறு பாயும் பகுதியாகும். குளிர்ந்த சூழல் அமைந்த நிலமாகும்.
உரிப்பொருள்:
ஆற்றி இருத்தல்
பகைவரை அழிக்கச் சென்ற தலைவனின் வரவிற்காகத் தலைவி காத்திருத்தல்.
தொழில் :
ஏறுதழுவுதல் ,ஆநிரை மேய்த்தல் .
மக்கள் :
ஆயர் , ஆய்ச்சியர்
தெய்வம் :
போகங்களுக்கு அதிபதியான திருமால் .
பொழுதுகள் :
பெரும்பொழுது : கார்காலம் ( ஆவணி , புரட்டாசி )
சிறுபொழுது : மாலை ( மாலை 6 முதல் இரவு 10 வரை )
மாலைப்பொழுது யாரையெல்லாம் வருந்தும்படியாகச் செய்தது .
1. ஆநிரை மேய்க்கச்சென்ற இடையர்கள் .
2. தயினைப்பிரிந்து பசியால் வாடும் கன்று .
3. மழையால் குளிரைத்தாங்காத ஆயர்மகள் .
4. தலைவனது வருகைக்காகக் காத்திருக்கும் தலைவி .
5. தலைவியின் வருத்தம் கண்ட முதுபெரும் பெண்டீர்.
சூழல் இனியதாக இருப்பதால் இன்பத்தின் தேடல் மிகுகிறது. எனவே , அதுவும் சிலருக்குத் துன்பம் தருவதாகவே அமைவதாக நப்பூதனார் பாடலில் காட்டியுள்ளார் .
நல்லோர் விரிச்சி கேட்டல்:
உலகமே நனைந்து மூழ்கும்படியாக மழை பெய்கிறது. திருமால் , மாவலி சக்கரவர்த்திக்குப் பேருவங்கொண்டு வானுக்கும் பூமிக்குமாக நின்றது போல மழைபெய்கிறது. மாலைப்பொழுது துன்பம் தருவதாக இருக்கின்றது. தலைவியின் வருத்தம் கண்ட முதுபெரும் பெண்டீர் , வண்டுகள் மொய்க்கும் நறுமணம் கொண்ட முல்லைப் பூக்களையும் , தெய்வத்தின் முன்தூவி , தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர் .
அவ்வேளையில் , ஆய்மகள் பசுவின் கன்றிற்கு , வளைந்த கொம்புகளைக்கொண்ட எங்கள் ஆயர் உனது தாயை ஓட்டிக்கொண்டு விரைந்து வந்துவிடுவர் என்று ஆறுதல் மொழி கூறுகின்றாள் . அது கேட்ட முதுபெரும் பெண்டீர் மகிழ்ந்தனர். தலைவன் வெற்றியோடும், , மிகுந்த செல்வத்தோடும் விரைவில் வருவான் என்று நற்சொல் கூறுகின்றனர்.
இயல் 2 காற்றே வா…!
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார்.
வசன கவிதை:
உரைநடையும் கவிதையும் இணைந்து உருவாவது வசன கவிதை
வசன கவிதை பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே புதுக்கவிதை உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
இந்தியா , சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர் மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்.
மொழி , சமூகம் இரண்டையும் இருகண்களாகப் போற்றியவர்.
கண்ணன் பாட்டு , குயில் பாட்டு , பாஞ்சாலி சபதம் , புதிய ஆத்திசூடி , போன்ற நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.
இயற்கையோடு இணைந்து இன்புறுவது மனிதனின் இயல்பு. இயற்கையைத் தெய்வமாக வழிபடுகிறோம். ‘ நீரின்றி அமையாது உலகு ' என்பது போலவே வாழ்விற்கு இன்றி அமையாதது காற்று. இக்காற்றே உலக உயிர்களின் இயக்கம் என்பதை உணர்ந்து வாழவேண்டும். ‘ சிந்துக்குத் தந்தை ' என்று பாராட்டப்படும் பாரதியாரின் கவிதைகளில் இடம் பெற்றுள்ளதே காற்று எனும் கவிதை. இது வசனகவிதையாகவே அமைந்துள்ளது. அதனொரு பகுதியே காற்றே வா.. எனும் கவிதை. இக்கவிதை வேண்டுகோள் வடிவில் அமைந்துள்ளது.
காற்றை பூக்களின் மகரந்தத்தூளைச் சுமந்துகொண்டு மனமயக்கத்தைத் தருகின்ற நறுமணத்துடன் வருக; இலைகளின்மீது உரசி , நீர் அலைகளில் மீது படர்ந்து வந்து எங்கள் உயிருக்கு உயிர் கொடு என வேண்டுகிறார்.
எங்களின் உயிர் நெருப்பு , உடலில் நீடித்துநிற்க நன்றாக வீசு ; சக்தி குறைவுற்று எங்களின் உயிர்நெருப்பை அவித்துவிடாதே; அதேநேரம் வீறுகொண்டு எழுந்துவீசி எங்கள் உயிரை மடித்து விடாதே என்றும் வேண்டுகிறார்.
எப்பொழுதும்போல் இளந்தென்றலாகச் சீராகவும் , சிறப்பாகவும் வீசிக்கொண்டே இரு ; நாங்கள் மகிழ்ந்து உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம் ; உன்னைப் புகழ்ந்து பேசுவதோடு உன்னையே எங்களின் தெய்வமாகவும் , வழிபட்டு மகிழ்கின்றோம் ; நீ எங்களின் ஓர் அங்கம். நீ நன்றாக வீசிக் கொண்டே இரு , என்கிறார் மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
இயல் 2
புயலிலே ஒரு தோணி
சிங்கம்புணரி ப.சிங்காரம்
குறிப்புச்சட்டகம்
முன்னுரை
கப்பித்தான்
கடற்கூத்து
தொங்கான்
கரையைக்கண்டனர்
முடிவுரை
முன்னுரை
தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழ்தல் மிக இயல்பான ஒன்றாகும். ப சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி எனும் நாவல் மிக அழகாக அதனை விவரிக்கிறது இவரது புதினம். புலம்பெயர்தலின் போது ஏற்பட்ட கடற் கூத்தின் கோரத்தாண்டவத்தைப் பற்றி இக்கதையில் விவரித்துள்ளார்.
கப்பித்தான்:
கொளுத்திய வெயில் மறைந்தது; வானம் இருண்டது பேசிக்கொண்டிருந்த மாலுமிகள் விரைந்து செயல்பட்டனர். பயம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது .இடி முழக்கத்துடன் மின்னல் மின்னியது; மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. சூறாவளியுடன் சேர்ந்து அலையும் சேர்ந்து தொங்கானைத் திணறடித்தன. அனைவரும் அச்சத்துடன் பல கைக்குள் புகுந்து கொண்டனர்.
கடற்கூத்து
வானமும் மழையும் கடலும் மீண்டும் மீண்டும் கொந்தளித்தன; தொங்கான் தாவிக்குதித்துத் தள்ளாடுகிறது. சுழல்கிறது ,மூழ்கி நீந்துகிறது. இருட்டும், கப்பல் அசைந்து நொறுக்குவது போன்ற சத்தமும் ஒன்றிணைந்து சீன பிசாசுகளை நினைவூட்டின. மூட்டைகள், சிப்பங்கள் கடல் நீரில் மிதந்து மறைந்தன.. கப்பல் சிப்பந்திகள் கப்பலைச் சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். மரங்களைச் செதுக்கி ஓட்டைகளை அடைத்தனர்.
தொங்கான்:
புயலின் தாக்கம் எவ்வளவு நேரம் நீடித்தது என்று யாரும் அறியவில்லை. கடிகாரத்தைப் பார்த்த போது அவைகளும் நின்று போயிருந்தன. கப்பல் தன்வசம் இன்றி தடுமாறி பயணித்துக் கொண்டிருந்தது. பினாங்கு எப்போது அடைவோம்? எனச்சொல்ல யாரும் இல்லை. இரவில் மேல்தட்டுக்கு வந்த கப்பித்தான் வானை உற்று நோக்கினான்.
பயமில்லை இரண்டு நாட்களில் கரையைப் பார்க்கலாம் என்றான். உப்புக் காற்று உடலை மிகவும் வருத்தியது.
கரையைக் கண்டனர்;
ஐந்து நாள் பயணத்தின் பின் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. பிலவான் முதல் சுமத்ரா வரை நடந்த அந்தப் பயணம் பரந்த கடலின் பயங்கரத்தை உணர்த்தியது.அது நினைவில் நீங்கா அனுபவமாக அமைந்துவிட்டது.
முடிவுரை:
ஆழி என்பது அழகானது; அதுபோலவே ஆழிப்பயணம் என்பதும் மிகவும் ஆபத்து நிறைந்தது என்பதை இக்கதை உணர்த்தியுள்ளது. நாவலாசிரியர் ப. சிங்காரம் தனது அனுபவங்களோடு கற்பனையையும் சேர்த்துப் புதினத்தை அழகாக வழங்கியுள்ளார்.
தமிழாசிரியர் பழ அன்புச்செல்வன்
கோலப் பெருமாள் செட்டி வைஷ்ணவ நடுவண் மேனிலைப்பள்ளி அரும்பாக்கம் சென்னை ஆகஸ்டு 2021
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Comments
Post a Comment